270 மில்லியன் போலி முகப்புத்தகங்கள் பாவனையில்

உலகின் முன்னணி சமூக ஊடகங்களுள் ஒன்றான பேஸ்புக்கில் உள்ள போலிக் கணக்குகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. 
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீட்டுக்கு உதவியதாக  பேஸ்புக் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்தத் தகவல் மார்க் சக்கர்பெர்க் தலைமையிலான அந்த நிறுவனத்துக்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் 2.1 பில்லியன் பயனாளர்களைக் கொண்டு இயங்கிவரும் பேஸ்புக் நிறுவனம், மூன்றாவது காலாண்டு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

அதில், போலிக் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள அந்த நிறுவனம், அதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி பேஸ்புக்கில் 2,700 லட்சம் (270 மில்லியன்) போலிக் கணக்குகள் செயல்படுவதாக அந்த நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது பேஸ்புக்கின் மொத்தப் பயனாளர்கள் எண்ணிக்கையில் 2 முதல் 3 சதவிகிதம் ஆகும். மேலும், 10 சதவிகித கணக்குகள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள பயனாளர்களின் மற்றொரு கணக்காக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் 13 சதவிகித மாதாந்தர பயனாளர்கள் முறைகேடான கணக்குகளைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை மாதக் கணக்குபடி இந்த எண்ணிக்கை 6 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.  

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post