(வடமலை ராஜ்குமாா்)
கட்டிடத் தேவைக்காக அகழப்படும் மணலின் தேவை தற்போது அதிகமாக காணப்படுகிறது. அதனடிப்படையில் மணல் அகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.அதிலும் அனுமதி வழங்கபட்டவர்களை விட சட்டத்திற்கு முரணான முறையில் இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பாக கடந்த 2017.01.01 தொடக்கம் 2017 .08.19 வரை 694 குற்றச்செயல்கள் தொடர்பில் கைதுகள் இடம் பெற்றுள்ளது,என திருகோணமலை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.
இச்சட்ட விரோத செயல்களுக்கான கைதுகளில் மணல் அகழ்வின் போது 291 கைதுகளும் மணலை களஞ்சியப்படுத்தி வைக்கும் போது கைதான சம்பவங்களாக 03 சம்பவங்களும் மணலை சட்டத்திற்கு முரணாக ஏற்றிக்கொண்டு செல்லும் போது 400 கைதிச் சம்பவங்களும் இடம் பெற்றுள்ளதாக மேலும் இவ்வறிக்கை தெரிவிக்கிறது.
இவ்வாறு கைதான நபர்கள் 671 எனவும் 603 வாகனங் கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற மூலம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கப் பெற்றுள்ள நீதி மன்ற தண்டப்பணமாக ஒரு கோடியே எழுபது இலட்சத்து இருபத்து ஒராயிரம் ரூபாவாகும். (1721000.00) இவ்வளவு பெறுமதியா ன தண்டத்தை செலுத்தியும் இது தொடர்கிறது.
இவ்வாறான சட்ட ரீதியாகவும் சட்டத்திற்கு முரணாகவும் மணல் அகழ்வுகள் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச செயலாளர் பிரிவில்; இடம் பெறுகின்றன குறிப்பாக மூதூர் கிண்ணியா சேருநுவர வெருகல் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆறுகளிலேயே இடம் பெறுகின்றது.
மூதூர் பிரதேச செயலகப்பிரிவுகளில் உள்ள படுகாடு சேமையடி நாவலடி இறால்குழி பரவிப்பாங்சான் கல்லாறு ஆகிய இடங்களிலும் கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவில் உள்ள கிரான் கண்டல்காடு தளவாய் பூவரசன்தீவு ஆகிய இடங்களில் அதிகமாக இடம் இந்த மணல் அகழ்வு இடம்பெறுகின்றது.
இப்பகுதிகளில் இருந்து சராசரியாக நாளொன்றுக்கு 400 கனரக வாகங்களில் மணல் வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
“மணல் அகழ்வுக்கான அனுமதிப் பத்திரங்கள் ஒரு மாதத்திற்குள் 30-100 வரையான கியூப் மணலை அகழ்வதற்கான அனுமதிகள் மாவட்டச் செயலகத்தின் மணல் அகழ்வுக்கு பொறுப்பான அதிகாரிகளால் வழங்கப்படுகின்ற போதும் தமக்காக வழங்கப்பட்ட அனுமதிக்கு மேலாக இந்த மணலை சட்டவிரோதமாக அகழ்கின்ற சம்பவங்கள் இடம் பெறுகின்றது“. என மாவட்டச் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
இவ்வாறான மணல் அகழ்வுக்கு பிரதேச செயலகம் மற்றும் மாவட்டச் செயலகம் வன பரிபாலன திணைக்களம் கரையோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் புவிசரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் போன்ற பலதரப்பட்ட திணைக்களங்களில் இருந்தும் அதிகாரிகளின் அனுமதியுடன் தான் இது இடம் பெற முடியும்.
ஆனால் இங்கு பெரும்பாலான மணல் அகழ்வுகள் அனுமதிகள் இன்றியே இடம்பெற்று வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.இதற்கு அன்றாடம் நீதி மன்றத்தில் வழங்கப்படுகின்ற தண்டனைகள் மற்றும் தண்டப் பணங்களை நாம் அவதானிக்கின்றோம்.இது பல ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
குறிப்பாக இவ்வாறு “அகழப்படுகின்ற மணல் தலைநகரான கொழும்பு குருநாகல் அநுராதபுரம் நீர்கொழும்பு கண்டி போன்ற மாவட்டங்களுக்கு கொண்டு சென்று அதிகமான தொகைக்கு விற்கப்படுகிறது.உதாரணமாக திருகோணமலையில் 25000 (இருபத்தையதயிரம்) ரூபாவிற்கு கொள்வனவு செய்யக் கூடிய ஒரு கியூப் மணல் கொழும்பிலே 45000 (நாற்பத்தையாயிரம்) ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படுகிறது“ இவ்வாறு திருகோணமலையில் இருந்து பயணிக்கும் தூரத்தின் அளவினை வைத்து விலை நிர்ணயிக்கப்படுவதாக இவ்வாறு மணல் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மணல் அகழ்வுக்கான அனுமதியை பெறுவதற்கு மிகவும் இறுக்கமான பல நடைமுறைகள் இருக்கின்ற போதும் இந்த மணல் திருட்டு தொடர்பான கைதுகள் அதிகரிப்பதற்கான காரணங்களை நாம் ஆராய்ந்தோமானால்
அனுமதிக்கப்பட்ட மணல் கியூப் அளவை விட மேலதிகமாக மணலை ஏற்றுவது. இதற்கு அனுமதி வழங்கிய திணைக்களம் தொடர்ச்சியான மேற்பார்வை செய்யாததும் ஒரு காரணமாகும்.
மேலும் பொலிசாரின் சட்ட நடவடிக்கையில் சில மந்தகதி காணப்படுவது.அனுமதி வழங்கும் திணைக்களங்கள் வழங்குகின்ற அனுமதிகளை அனுமதி வழங்கியவருக்கும் தமக்கும் இடையே இரகசியமாக வைத்துக் கொள்ளல் அனுமதி பத்திர பிரதிகளை அப் பகுதி பொலிசாருக்கு கூட அனுப்பி வைக்காத நிலை இத்துடன் இலஞ்சம் ஊழல் முதல்லாவையும் இங்கு காணப்படுவதே இதற்கான காரணம் என இம் மணல் அகழ்வுக்கான சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இக்குற்றச்சாட்டு தொடர்பாக கிழக்கு மாகாணத்தின் ஆளுனர் ரோகித போகல்லா கம அவர்களிடம் கேட்ட போது இவ்வாறு கருத்து தெரிவித்தார். “ “சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாகவும் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை மேற் கொள்ள வேண்டிய திணைக்களங்கள் மந்த கதியில் செயற்படுவதை தன்னாலும் உணர முடிகிறது.இதனை தடுக்க அரசாங்க புலனாய்வு துரிதமாக செயற்பட வேண்டியது அவசியம.“
மேலும் இவ்வாறு மணலை வெளி மாவட்டங்களுக்கு லொறிகள் மூலம் கொண்டு செல்வதனால் வீதிகளில் வாகன நெறிசலும் விபத்துக்களும் ஏற்படுகிறது.என ஆளுனர் மேலும் தெரிவித்தார்.
எனவே மணலை அகழ்வதில் புதிய விதிமுறைகளை கொண்டுவந்து கட்டப்படுத்த வேண்டும். என்பதுடன் வெளிமாவட்டங்களுக்கு மணலை ஏற்றுவதற்காக புகையிரத்தை பயன்படுத்துவது உகந்தது இவ்வாறு ஒரு தடைவ புகையிரதத்தை பயன்படுத்தும் போது 200 லோறிகளின் பயணத்தை வீதிகளில் குறைக்க முடியும் அத்துடன் இதனை அரசாங்கம் எடுத்து செய்வதன் மூலம் ஏனைய மாவட்டங்களுக்கு கட்டிட தேவைக்கான நிர்ணய விலையில் மணலை வழங்க முடியும்.இத்திட்டத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து செயற்படுத்தவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
மேலும் பொலிசாரின் நடவடிக்கைகள் மந்தகதியில் உள்ளமை என்ற கருத்து தொடர்பாக பொலிசாரிடம் கேட்ட போது “மணல் அகழ்வு தொடர்பாக கடந்த காலங்களில் சில அரசியல் வாதிகளின் தலையீடு இருந்து வந்தால் கட்டுப்படுத்துவது மந்த கெதியில் இருந்து வந்தது.ஆயினும் தற்போது அரசாங்கத்தின் உயர்மட்டத்தின் அழுத்தங்கள் காரணமாக எவரானாலும் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.அதன் அடிப்படையில் தினந்தோறும் சட்ட விரோத மணல் அகழ்வு செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் இடம் பெறுகின்றது.இவ்வாரம் மாத்திரம் 10க்கும் அதிகமான அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் ஏற்றிய உழவு இயந்திரங்கள் மற்றும் 5 டிப்பர் லொறிகள் கைதி செய்யப்பட்டு நீதி மன்றம் மூலம் தலா 50 ஆயிரம் ரூபாய் தண்டம் நீதி மன்றத்தால் விதிக்கப்பட்டள்ளது“.என பொலிசார் தெரிவிக்கின்றனர';.
இம் மணல் அகழ்வு அதிகமாக இடம் பெறும் பகுதியின் ஆறு ஆழமாக்கப்பட்டதுடன் கடல் நீரானது நன்னீருடன் கலந்து உவர்த்தன்மை ஆகின்றது. எனவே ஆற்று நீரை நம்பி விவசாயம் மேற்கொண்டுவரும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆற்றங் கரையோரங்களிலுள்ள மரங்கள் நீரினால் அடித்துச் செல்லப்படுகிறது.
இது தொடர்பாக கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஈச்சந்தீவு கிராம அபிவிருத்தி ச் சங்கத்தின் தலைவர் நடராஜலிங்கம் தமிழ்ச்செல்வன் இவ்வாறு கருத்து தெரிவிக்கின்றார்'.“ஏற்கனவே மணல் அகழ்வுகள் வெளி மாவட்டமான குருணாகல் அலவை போன்ற பகுதிகளில் இடம் பெற்று வந்தது.அங்கு பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டதால் இன்று திருகோணமலையில் அனுமதி வழங்கப்படுகிறது.தெரிந்தே வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதியை திட்டமிட்ட செயற்பாடாகவே நாம் நோக்க வேண்டியுள்ளது“.
இவ்வாறு கிண்ணியா பிரதேசத்தில் கெழுத்திமுட்டைதுறை மாமிசப்பா கண்டல்காடு படுகாடு மணலாறு போன்ற பகுதிகளில் இந்த மண் அகழ்வுகள் இடம்பெற்று வருகிறது.இப்பிரதேசத்தில் ஆற்றங்கரையோரம் கோடை காலத்தில் ஆற்றுநீரை இறைத்து சேனைத் தோட்டங்களை பல ஆண்டகளுக்கு முன்பிருந்து மேற் கொண்டு வந்துள்ளோம்.ஆயினும் தற்போது இங்கு செல்ல வன இலாக்கா தடை விதித்துள்ளது.அங்கு சென்று தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுபவர்கள் கைதி செய்யப்படுகிறார்கள். இவ்வாறு விவசாயத்திற்கு தடை மணல் அகழ்வுக்கு மட்டும் எவ்வாறு அனுமதி வழங்கலாம்?
இருப்பினும் இன்றைய நிலையில் மணல் அகழ்வு அதிகமாக நடைபெறுவதனால் விவசாய நிலங்களில் கடல்நீர் உட்புகுந்து உவர்த்தன்மையடைந்து இப்பகுதிகளில் விவசாயம் மேற் கொள்ள முடியாமல் போகிறது' என தமிழ்ச்செல்வன்.தெரிவித்தார்..
மேலும் இது தொடர்பாக மூதூர் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள மிக மேசமாக பாதிப்புக்கு உள்ளாகி வரும் இறால்குழி கிராமத்தின் சூழல் பாதுகாப்பு குழு தலைவர் த.தங்கராசா என்பவர்.கருத்து தெரிவிக்கையில்
“மூதூர் இறால்குழி கிராமத்திற்கான அன்றைய காலம் போக்குவரத்தின் போது ஆற்றைக்கடந்து போக பாதையை(படகு சேவை) பாவித்து வந்தோம் அவ்வாறு பயணித்து மூதூருக்கு சென்று வர எமக்கு ஒரு நாள் செலவாகும். இன்று எமக்கு வீதி இலகு படுத்தபட்டுள்ளது.ஆனால்“ எமக்கு இலகுபடுத்தப்பட்ட போக்குவரத்து எமது கிராமத்திற்கு ஆப்பு வைத்து விட்டது“ என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.இங்குள்ள மணலை எடுத்துக் கொண்டு போக வீதியை இட்டார்கள் அது எமது மக்களுக்கு இன்று வினையாகிப் போனது.
மூதூர் திருகோணமலை பிரதான வீதியானது புனரமைக்கபட்டதன் பின்னர் எமது மக்களும் மக்களின் வாழ்வாதார காணிகளும் பிரிந்து விட்டது வீதிக்கு ஒரு புறம் மக்கள் குடியிருப்பு காணியும் வீதிக்கு மறுபுறம் எமது ஜீவனோபாய தொழிலான விவசாயத்தின் காணிகளும் உள்ளது. நான் பிறந்த காலம் முதல் இந்த கிராமத்தை கண்டவன் என்ற அடிப்படையில் 1949 இல் இருந்து தற்போது வரைக்கும் பார்த்தால் எமது குடியிருப்பு கிராமமானது அரை வாசி ஆற்றுக்குள் போய் விட்டது.
அத்துடன் ஆறு ஆழப்படுத்தப்பட்ட காரணத்தினால் மகாவலி கங்கை நீரின் வேகம் அதிகரிக்ப்பட்டு கிராமத்தின் குடியிருப்புக் காணிகளையும் அரித்துக் கொண்டு செல்லுகின்றது. பருவ மழை(மாரி) காலங்களில் வெள்ளம் ஏற்படுவதால் இறால்குழிக் கிராமமும் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள வெருகல் மற்றும் மாவடிச்சேனை போன்ற கிராமங்கள் வருடா வருடம் மூழ்குவதுடன், வீடுகள் மற்றும் கிராமத்திலுள்ள எமது வளங்கள் அனைத்தும் இழக்கப்பட்ட வண்ணமே உள்ளது'. என்றார்
திருகோணமலையில் மனித உரிமை மற்றும் சூழல் பாதுகாப்பு தொடர்பாக பணியாற்றுவரும் தன்னார்வ நிறுவனமான இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவன இணைப்பாளர் பொ.சற்சிவானந்தம் கருத்து தெரிவிக்கையில் 'ஆற்றின் உள் கனரக வாகனங்கள் இறங்கி மணல் அகழ்வு சட்டத்திற்கு புறம்பாக இடம் பெறுவதனால் ஆற்றில் உள்ள சுறி படிவுகள் அகற்றப்படுகிறது.இதனால் அங்கு இறால் நண்டு உற்பத்தி இல்லாமல் போகிறது'.
மேலும் 'ஆற்றின் கரையோரத்தை இடித்து மண்ணை அகழ்வதனால் கிளையாறுகள் உருவாகும் வாய்ப்புள்ளது.அவ்வாறு கிளையாறுகள் ஏற்பட்டால் கடலறிப்பு ஏற்பட வாய்புள்ளது.காரணம் கிளையாறு ஏற்பட்டால் மழை காலங்களில் ஆற்றின் நீர் வேகமாக கடலில் சென்றடைவது குறையும் எனவே மாரி கடல் மூலமாக பாரிய அலைகள் எழுந்து அது கடலறிப்பை ஏற்படுத்தி நிலத்தை கடலுக்குள் எடுக்கும் வாய்ப்புள்ளது.இந்த இயற்கை சம நிலை பாதிக்கப்படும்'. என இணைப்பாளர் தெரிவித்தார்“ மேலும் திருகோணமலையைச் சூழ அளமான கடற்பகுதி இயற்கையாகவே உள்ளதால் துறைமுக வசதியும் இங்கு அமைந்துள்ளது.எனவே ஆற்றின் ஆளத்தை அதிகப்படுத்த கடல் நீரின் ஆளத்திற்கு ஆற்றின் ஆளத்தையும் செயற்கையாக ஏற்படுத்துகின்ற போது ஆற்றுநீர் உவர் தன்மை அதிகரிக்கிறது.இதனால் விவசாய நிலங்கள் தரிசு நிலமாகும் வாய்பு அதிகரிக்கிறது“.அதற்கு நல்ல உதாரணமாக கிண்ணியா பூவரசன்தீவில் உள்ள 10 ஏக்கர் விவசாயநிலம் விவசாய செய்கை பண்ணமுடியாத நிலைக்கு மாறியுள்ளது
இவ்வாறு 'ஆற்று நீரில் உப்புத் தன்மை அதிகரிக்கப்பட்ட இடங்களில் கண்டல் தாவரங்கள் வளர்ந்துள்ளது.இதன் நிமிர்தம் மக்களுடைய காணிகளை வனவள திணைக்களம் தமக்குறிய இடமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளனர்அதனால் மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதை திருகோணமலை மாவட்டத்தில் காணக் கூடியதாகவுள்ளது'.இவ்வாறு அதிகமான மணல் அகழ்வு நேரடியாகவும் மறைமகமாகவும் பல ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது. என அகம் தன்னாரவ அமைப்பின் இணைப்பாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் 'இயற்கையை பாதுகாக்கும் தற்போதய அரசு இயற்கைக்கு குந்தகம் விளைவிக்கும் மணல் அகழ்வு விடயத்தை கட்டுப்படுத்தி இயற்கைக்கு பாதகம் இல்லாதவாறு நடைமுறைப்படுத்த நடவடிக்கை வேண்டும';. என திருகோணமலை மாவட்ட சூழல் பாதுகாப்பு ஆர்வலர்களும் சிவில் சமூக அமைப்புக்களும் பொதுமக்களும் எதிர்பார்த்து நிற்கின்றனர்.