ஆர்ப்பாட்டமும் ஐ.நாவுக்கு மகஜரும்

ஐந்தம்சக் கோரிக்கையை முன்வைத்து திருகோணமலை, உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள சட்ட உதவி மையத்துக்கு முன்பாக இன்று (11) ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்டச் சமூக ஆர்வலர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொண்டனர். வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டி அதிகாரப்பகிர்வே நாம் கோரும் அரசியல் தீர்வு, கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், நடந்தேறிய சித்திரவதை மற்றும் படுகொலைகளை விசாரிப்பதற்கான விசேட பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து, ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரை திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிருஸ்டியன் நோயல் இமானுவேலிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கையளித்தனர். இந்த மகஜரைப் பெற்றுக்கொண்ட திருகோணமலை மறை மாவட்ட ஆயர் தெரிவிக்கையில்,'எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரியப்படுத்தியிருந்தோம். அவற்றுக்கான தீர்வு சாத்தியப்படாத நிலையில், ஐக்கிய நாடுகள் சபையை நாம் நாட வேண்டியுள்ளது' என்றார்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post