திருகோணமலை, நிலாவெளிப் பொலிஸ் பிரிவில் இரண்டு கோவில்களுக்கு இனந்தெரியாதோரால் திங்கட்;கிழமை (02) இரவு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அடம்போடை வீதியை அண்டி அமைந்துள்ள கூழாவடிப் பிள்ளையார் கோவில் மற்றும் நிலாவெளி 02ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பத்தினி அம்பாள் கோவில் ஆகியவற்றிலேயே சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. கூழாவடிப் பிள்ளையார் கோவிலின் கற்பக்கிரகத்தில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை உடைக்கப்பட்டு, அச்சிலை அருகிலுள்ள காட்டுப்பகுதியில் வீசப்பட்டுக் காணப்பட்டது. இக்கோவிலுக்கு வழமையாக அதிகாலை வேளையில்; செல்லும் பெண் ஒருவர் பிள்ளையார் சிலைக்கு பூ வைத்து வழிபடுவதுடன், மின்விளக்கையும் அணைக்கும் பணியையும்; செய்துவந்தார். அவ்வாறே, இன்று (03) அதிகாலை கோவிலுக்குச் சென்ற இப்பெண் பிள்ளையார் சிலைக்கு பூ வைப்பதற்காகச் சென்றபோது, கற்பகக்கிரகத்தில் இருந்த சிலை காணாமல் போயுள்ளதை அவதானித்துள்ளார். இந்நிலையில், மேற்படி சிலையைத் தேடியபோது, அச்சிலை அருகிலுள்ள பற்றைக்குள் காணப்பட்டது. இது தொடர்பில் கோவில் நிர்வாகத்தினருக்கு அப்பெண் தெரியப்படுத்தியுள்ளார். இக்கோவில்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அக்கோவில்களின் நிர்வாகத்தினர் தம்மிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.