இலங்கையில் கடந்த சில நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. காற்று பலமாக வீசுவதால் கடல் கொந்தளிப்பு அபாயம் குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்கள் தொழிலுக்கு செல்வது தொடர்பில் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டுமெனவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் கடல் அலைகள் பெருத்த இரைச்சலுடன் மூசிக்கொண்டு கொந்தளித்து உயர எழுந்துகொண்டிருப்பதால், மீனவர்கள் எவரும் படகுகளை கடலில் இறக்கி தொழில் செய்ய முடியாத கையறுநிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே வருடந்தோறும் நவம்பர் மாத பிற்பகுதியில் இருந்து ஜனவரி மாத இறுதிவரை மீன்பிடித் தொழில் என்பது மந்தமாகவே இருக்கும். இம்முறையும் அப்படித்தான். தற்போது மூன்று நாட்களாக தொழிலுக்கு செல்ல முடியவில்லை. இந்த மூன்று நாட்களும் அன்றாடம் வாழ்வை நடத்திச் செல்வதே பெரும்பாடாக இருக்கின்றது. இன்னும் எத்தனை நாளைக்கு தான் தாக்குப்பிடிப்பது? என்பதே புரியாத புதிராக உள்ளது.
இந்த நெருக்கடியான காலப்பகுதியில் அரசாங்கமோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ நிவாரணப்பொருட்களையோ அன்றி நிதியுதவிகளையோ வழங்கினால் பேருதவியாக இருக்கும். நிவாரண உதவிகள் எதுவும் இல்லாத பட்சத்தில் வாழ்க்கையை எப்பாடுபட்டாவது கொண்டு நடத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் அபாய எச்சரிக்கையையும் மீறி கடலுக்கு செல்லும் பல மீனவர்களை கடல் காவு கொண்டது தான் மிச்சம். என்று வடமராட்சி பிரதேச மீனவர்கள் பெருமூச்சை உள்ளிழுத்தப்படி கூறிமுடிக்கும் போது, அவர்களின் ஒற்றைக்கண்களில் கடந்த கால வாழ்க்கை கோலத்தின் சோகக்கீறல்களையும் மற்றைய கண்களில் வாழ்க்கை பற்றிய புதிய தேடலையும் காண முடிந்தது.