( அ . அச்சுதன் )
இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டு இந்நாட்டின் நீதித்துறை ஏனைய அரச துறைகளைப் போன்றே சிங்கள பௌத்த பெருந்தேசிய ஒடுக்குமுறையை நிலை நாட்டும் இன்னுமொரு துறையாக இருந்து வருவதை நாம் அறிவோம். யுத்தம் அதிதீவிரமாக நடைபெற்ற காலப்பகுதியில் நீதித்துறைக்கான வேலைகளை படைத்தரப்பு தமிழர் தாயக பிரதேசங்களில் நிலைநிறுத்தும் வாய்ப்புக்களை அரசிற்கு வழங்கவேயில்லை. ஆனாலும் முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆட்சியில் இருந்த போது இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் படைத்தரப்பால் நடாத்தப்பட்ட பல படுகொலைச் சம்பவங்களில் மிக நேரடியாக தொடர்பு நிரூபிக்கப்பட்ட படைத்தரப்பினரை கைது செய்யும் நடவடிக்கைகள் நடைபெற்றதை நாம் அறிவோம். சகோதரி கிரிசாந்தி படுகொலை அதனைத் தொடர்ந்த செம்மணி புதைகுழி விவகாரம், மிருவில் படுகொலை, குமாரபுரம் படுகொலை, தம்பலகமம் பொற்கேணி படுகொலை போன்றன அவற்றில் சில உதாரணங்களாகும். ஆனால் கைது செய்யப்பட்ட அத்தனை படைத்தரப்பு ஆட்களையும் இலங்கை நீதித்துறை விடுதலை செய்திருக்கிறது. வழக்கை சிங்களவர்கள் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்றுவதும் அங்கே வைத்து சாட்சிகள் மிரட்டப்பட்டு பொய் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளும் நாம் அறிந்தவையே. இது தொடர்பான எத்தனையோ முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளமை வெளிப்படையானது.
அதே வேளை தமிழர் தாயக பிரதேசங்களில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட விகாரைகள் தொடர்பாக 2006 ஆம் ஆண்டில் திருகோணமலை பேரூந்து நிலையத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்ற வேண்டும் என்கிற நீதிமன்ற தீர்ப்பை இனங்களுக்கிடையிலான முறுகலை ஏற்படுத்தும் என பொலிஸ் தரப்பின் வாதத்தை ஏற்று நீதிமன்று இன்று வரையும் அகற்றாமல் இருப்பதையும் நாம் அறிவோம். தமிழர் தாயக பிரதேசமெங்கிலும் தமிழர் நிலங்கள் மீதான அரசின் ஆக்கிமிப்புக்களுக்கெதிராக நூற்றுக்கணக்கான வழக்குகள் இன்னும் நிலுவையிலுள்ளன. இது வரையும் ஒரு வழக்கிற்கும் தீர்ப்பு கிடைக்கவில்லை.
அண்மையில் முல்லைத்தீவில் குருந்தூர் மலை ஆக்கிமிக்கப்பட்டு பௌத்த விகாரை கட்டப்பட்டதன் பின்பு முல்லைத்தீவு நீதிமன்றின் அவ்விகாரைக்கெதிரான தீர்ப்பு தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு ஆறுதல் வெற்றியாகும். ஆனாலும் அவ்விகாரை நீதிமன்ற தீர்ப்பை மீறிக்கட்டப்பட்டதும் அதன் பின் நடைபெற்ற நிகழ்வுகளையும் நாம் அறிவோம். இந்த தீர்ப்பை வழங்கிய மாவட்டத்தின் நீதிபதியை ஒரு அமைச்சர் பாராளுமன்றத்தில் வைத்து பைத்தியக்காரன் என்று பேசியதை இந்த நாடே மௌனமாக பார்த்துக் கொண்டு இருந்தது. நீதித்துறை மீது நம்பிக்கை கொண்ட சிங்கள முற்போக்கு தரப்புக்களின் மௌனம் தான் இந்த விடயத்தில் மிகவும் கொடுமையானதாகும்.
மேற்படி முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தனது பதவியை உயிர் அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் என்பவற்றை காரணமாக முன்வைத்து இராஜினாமா செய்திருக்கிற செய்தியை நேற்றிலிருந்து ஊடகங்கள் வாயிலாக அறிந்து நாம் மிக கவலை கொள்கிறோம். அவர் மீது நிகழ்த்தப்பட்ட அழுத்தங்களையும் உயிர் அச்சுறுத்தல் செயற்பாடுகளையும் நாம் மிக வன்மையாக கண்டிக்கின்றோம். நாட்டின் ஒரு நீதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறதெனில் இந்த நாட்டின் சாதாரண தமிழ்க்குடிமகனின் நிலைமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தேசிய நல்லிணக்கம் மற்றும் சனநாயகம் பேசும் பெரும்பான்மைச்சமூக முற்போக்காளர்கள், அரகலய போன்ற போராட்டங்களை முன்னின்று நடாத்திய சிவில் சமூகங்கள், நாட்டின் இடதுசாரிகள் என சொல்லிக் கொள்ளும் ஜேவிபி, முன்னிலை சோசலிச கட்சி போன்ற கட்சிகள் இவ்விடயம் தொடர்பாக தமது மௌனம் கலைத்து இந்த வகை பேரினவாத செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். நீதி மன்றங்களை நம்பியிருக்கும் நீதித்துறை சார்ந்த பிரிவினர் இவ்விடயம் தொடர்பாக காத்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
நீதித்துறை மீது நம்பிக்கை கொண்ட அனைத்து சட்டத்தரணிகளும் இந்த விடயத்தில் ஒன்று திரண்டு இன்னுமொரு நீதிபதிக்கு இவ்வாறு நிகழாமையை உறுதி செய்ய வேண்டும். சிவில் சமூகங்கள் மீளவும் அணிதிரண்டு இந்த விடயத்தை பேசு பொருளாக்க வேண்டும். தமிழ் தேசிய பரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தை தேசிய சர்வதேச மட்டங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். இலங்கை பேரினவாத அரசின் போலியான நல்லிணக்க முகமூடிகளை வெளிக்கொணர ஆக்கபூர்வமான நடைமுறைச்சாத்தியமான அத்தனை வழிமுறைகளையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையிலெடுக்க வேண்டும். தமிழ்த்தேசிய சிதைப்பு நடவடிக்கைகளுக்கெதிராக நம் பாராளுமன்ற உறுப்பினர்களை இணைந்து எதிர்வினையாற்றாமல் தடுக்கின்ற உள்அரசியலை புறந்தள்ளி ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்.
இலங்கை நீதித்துறை மீதான நம்பிக்கைகள் எமக்கு இல்லையாயினும் அதனை நம்பும் அப்பாவி மக்களுக்கு அது கிடைப்பதற்கான ஆகக்குறைந்த பொறிமுறையை அரசாங்கம் உறுதி செய்யாமல் விட்டு அதனூடாகவும் ஒரு இன வெறுப்பை தூண்டி வாக்கு வங்கியை நிரப்பிக் கொள்ளும் தந்திரோபாயங்களை சர்வதேசம் புரிந்து கொள்ளும் என நாம் நம்புகிறோம்.. மக்களின் பாதுகாவலன் வேடம் போட்டுக் கொண்டு மறு பக்கமாக இனவாதிகளுக்கு தூபம் போடும் வேலைகளை சிங்கள அரசாங்கம் நிறுத்திக் கொள்ள அவர்கள் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். பேரினவாத ஒடுக்குமுறைகளை கைவிட்டு தூய்மையான சிந்தனை மாற்றங்களுடன் சிங்கள பெரும்பான்மை மக்கள் நல்லிணக்க அரசியலை முன்னெடுக்க வேண்டும் என நாம் கோரி நிற்கின்றோம். சாதாரண மக்களை அச்சுறுத்தும் இவ்வகையான செயற்பாடுகளுக்கு எதிராக நாம் மிக வன்மையான கண்டனங்களை பதிவு செய்கின்ற அதே வேளை நாடு முழுவதிலிருந்தும் அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டை கண்டித்து நடாத்தப்படும் மக்கள் போராட்டங்களை நாம் ஆதரித்து நிற்கின்றோம் என திருகோணமலை புமுதி சமூக உரிமைகளுக்கான அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தொரிவித்துள்ளது.
புழுதி- சமூக உரிமைகளுக்கான அமைப்பு,
திருகோணமலை.