மாகாண மட்டத்தில் உயர்நீதிமன்றங்கள் மற்றும் நிர்வாகத்துக்கான மேன் முறையீட்டு நியாய சபையையும் அரசமைப்பில் உள்வாங்குமாறு, திருகோணமலையை தலமாகக் கொண்டு இயங்கும் சமூக அபிவிருத்திக்கான மாற்றுக்கொள்கை அமைப்பு, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக மேற்படி அமைப்பு, வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறியுள்ளதாவது,
“சாதாரண வறிய மக்களும் தமது அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க ஒரு சந்தர்ப்பமாக உயர்நீதிமன்றத்தை, மாகாண மட்டத்தில் நிறுவ வேண்டும்.
“இக்கருத்தை அமுல்படுத்துமாறு, ஐக்கிய நாடுகள் சபையால் இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டள்ளது.
“மேலும், அரச சேவையில் உள்ளவர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்களில், அவர்கள் நியாயத்தைப் பெறுவதற்கு நிர்வாகத்துக்கான மேன் முறையீட்டு நியாய சபை உள்ளது. ஆனால், மாகாண மட்டத்தில் கடமையாற்றுவோரின் பிரச்சினைகளை, இந்தச் சபை ஏற்காது.
“இதனால், மாகாண மட்டத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்கள், தமக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளைக் கொண்டு சென்று நியாயம் பெற, ஒரு கட்டமைப்பு இல்லாத படியால் பாதிக்கப்படுகின்றனர்.
“எனவே, மாகாண மட்டத்தில் நிர்வாகத்துக்கான மேன் முறையீட்டு நியாய சபையை உருவாக்க வேண்டியது அவசியமாகும். இதனை அரசமைப்பில் சேர்த்தக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, வடக்கிலும் கிழக்கிலுமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் ஆலோசனை வழங்கியுள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.