அரசியல் தலையீட்டுடன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு - எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை

அரசியல் தலையீடுகளுக்கு ஒருபோதும் அடிபணியாது கல்விப் பணி புரிவேன் எனக் கூறிவிட்டு கிழக்கு மாகாண கல்வி அமைச்சை அரசியல் தலையீட்டுடன் செயற்படுத்துகின்ற நிலமை உருவாகி உள்ளது என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் நேற்று (21) கல்வி அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்….. கிழக்கு மாகாண கல்வி அமைச்சராக பதவியேற்ற தண்டாயுதபானி கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் இனி எந்தவிதமான அரசியல் தலையீடுகளும் நடைபெறாது அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியாது கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களின் கல்விச் செயற்பாடுகளும் பாதிக்கப்படாமல் கல்விப் பணி புரிவேன் எனத் தெரிவித்தார். ஆனால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயற்பாடுகள் அனைத்தும் இன்னும் அரசியல் தலையீட்டுடன் இடம் பெற்று வருகின்றன என்பதற்கு இன்றைய வரவு செலவுத் திட்ட நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்ற கல்வி அமைச்சின் அதிகாரிகளே சாட்சிகளாக உள்ளனர். கிழக்கு மாகாண கல்வி அமைச்சரும் உயர் அதிகாரிகளும் நமது கிழக்கு மாகாண கல்வித் துறையின் வளர்ச்சியில் அர்ப்பணிப்போடு பணிபுரிகின்றனர். அவர்களுக்கு கிழக்கு மாகாண மக்களின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கிழக்கு மாகாண கல்வி அமைச்சராக எஸ்.தண்டாயுதபானி அவர்கள் நியமனம் செய்யப்படுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 10 மாகாண சபை உறுப்பினர்கள் மேற்கொண்ட அதிரடி முடிவே பிரதான காரணம் என்ற யதார்த்தத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் உள்ளத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சினை வழங்கும் எண்ணம் முஸ்லிம் காங்கிரஸிற்கு இருந்திருந்தால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சராக திருமதி ஆரியவதி கலப்பதியை நியமித்திருக்க மாட்டார்கள். நாங்கள் 10 பேரும் திடீர் முடிவுகளை மேற்கொள்ளவில்லை என்றிருந்தால் இன்னும் ஆரியவதி கலப்பதியே கிழக்கு மாகாண கல்வி அமைச்சராக இருந்திருப்பார். நாங்கள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரான தண்டாயுதபாணி அவர்களுடன் கிழக்கு மாகாண கல்வித் துறையை வளர்ப்பதற்கு இயன்றளவு உதவி புரிந்து வருகின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எப்போதும் கொள்கை அரசியல் செய்பவர்கள் நாங்கள் எப்போதும் அவர்களுக்கு மதிப்புக் கொடுத்து செயற்படுபவர்கள் ஆனால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் நடவடிக்கைகளை திருகோணமலையில் இருந்து பாணம வரை மேற்பார்வை செய்து நமது கிழக்கு மாகாண கல்வித் துறைக்கு பணி புரிய வேண்டும். கடந்த வருடம் அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகளில் கடமை புரியும் சிறந்த அதிபர்களை அரசியல் காரணங்களுக்காக இடமாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன இவைகளை உடனடியாக நிறுத்துங்கள் என்று நானும் அக்கரைப்பற்று வலய கல்விமான்களும், பாடசாலை சமூகமும் புனித நோன்பு காலத்தில் வந்து கோரிக்கை விடுத்தோம். அக்கரைப்பற்று வலயத்தில் அரசியல் தலையீடுகளினால் அதிபர்களை இடமாற்றும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் எங்களிடம் வாக்குறுதியை வழங்கி 02 வாரங்களில் பாடசாலை அதிபர்களுக்கு அரசியல் தலையீட்டுடன் இடமாற்றங்கள் வழங்கப்பட்டன. இதனால் எமது பிராந்திய கல்விச் செயற்பாடுகளில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் பூகோள ரீதியில் எல்லைப் பிரதேசத்தில் அமைந்துள்ள பொத்தவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயத்தினை அமைப்பதற்கான மாகாண சபையின் மூன்று தீர்மானங்கள் மாகாண அமைச்சரவையின் தீர்மானமும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்னும் கிழக்கு மாகாண அமைச்சரவையின் தீர்மானத்தை மத்திய கல்வி அமைச்சுக்கு சிபார்சு செய்து அனுப்பாமல் தாமதிக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணத்தில் எங்கு எத்தனை கல்வி வலயங்களை கிழக்கு மாகாண சபையால் வழங்க முடியுமோ அவைகளை வழங்குங்கள் ஆனால் அக்கரைப்பற்றில் இருந்து 50 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயத்தினை வழங்குங்கள். இன்னும் ஒரு சில வாரங்களில் பொத்துவிலுக்கான கல்வி வலயம் அமைக்கப்படும் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சரும் பகிரங்கமாகவே தெரிவித்துவிட்டு இதுவரையும் இக்கல்வி வலயம் தொடர்பான விடயங்களை கிழக்கு மாகாண சபை மட்டத்தில் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அண்மையில் பொத்துவில் அல் - கலாம் மஹா வித்தியாலயத்தில் மத்திய அரசாங்க இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்னன் கலந்து கொண்ட நிகழ்வில் பிரதி சுகாதார அமைச்சர் பைஸல் காசிம் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தரப்பினரும் விரும்பாதவரை பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயம் ஒருபோதும் கிடைக்காது என பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார். பொத்துவில் பிரதேச மக்கள் 2017ஆம் ஆண்டு தங்களுக்கான கல்வி வலயம் வழங்கப்படுமென என எதிர்பார்த்திருந்து ஏமாற்றம் அடைந்த நிலையில் உள்ளனர். பொத்துவில் பிரதேசத்தில் 31 அரச பாடசாலைகள் அமைந்துள்ன. 20 முஸ்லிம் பாடசாலைகளும், 08 தமிழ் பாடசாலைகளும், 03 சிங்களப் பாடசாலைகளும் அமைந்துள்ளன. எனவே, பொத்துவில் கல்வி வலயம் தொடர்பாக கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானம், அது தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இச்சபையில் கல்வி அமைச்சின் விபரங்களை தெரிவிக்க வேண்டும். அக்கரைப்பற்று வலயத்தில் உள்ள அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில் கோட்டங்களுக்கான கோட்டப் பணிப்பாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு பல மாதங்கள் சென்றும் இப்பதவிகளுக்கான நேர்முகப் பரீட்சை நடைபெறாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றன. இச்செயற்பாடுகளினால் எமது பிராந்திய கல்வி வளர்ச்சியில் கோட்ட மட்டத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்றன. இப்பதவிகளுக்கு நேர்முகப்பரீட்சையினை நடாத்தி பொருத்தமானவர்களை விரைவில் நியமனம் செய்ய எற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். எங்களது பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர்களை நியமிக்க இழுத்தடிப்பு செய்யப்படுவதனால் எங்களது கல்வியினை பாதிப்படைய செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா? என எமது மக்கள் சந்தேகிக்கின்ற நிலமை உருவாகி வருகின்றன எனத் தெரிவித்தார்

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post