(ஆர் ரோஸன்)வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் கிழக்கு மாகாணசபை மேற் கொள்ளவேண்டும் என வழியுருத்தி கிழக்கு மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரும் எதிர்க் கட்சித் தலைவருமான சி.தண்டாயுதபாணி அவர்கள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் மாகாண பிரதம செயலாளர் உற்பட அணைத்து மாகாண சபை அமைச்சர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதம் பின்வருமாறு அமைகிறது.
கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக கிழக்கு மாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் பல கிராமங்கள் வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளன. வீடுகள் வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளதினால் மக்கள் பாடசாலைகள், கோவில்கள் போன்ற பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
திருக்கோணமலை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்களை நேரில் சென்று அவர்களின் நிலைமைகளை பார்வையிட்டேன். அவர்களுக்கான அவசர உணவுத் தேவைகளை பிரதேச செயலகங்கள் கவனிக்கின்றன.
இந்த வெள்ள அனர்த்தம் இம்மக்களது வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. அன்றாடம் உழைத்து வாழ்க்கையை நடாத்தி வந்தவர்கள் தொழிலுக்குப் போகமுடியாமல் முடங்கியுள்ளார்கள். வெள்ளம் வழிந்தோடியவுடன் இவர்கள் வீடுகளுக்கு திரும்பும் சந்தர்ப்பத்தில் உணவு, வீடுகளின் பாதிப்புக்கான திருத்தம், சுகாதார வசதிகள் போன்ற பிரச்சனைகளை; எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
எமது மாகாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு எமது மாகாணசபை பொருத்தமான உதவிகளை வழங்கவேண்டியது அவசியமானதாகும். குறைந்தபட்சம் இரு வாரங்களுக்கான உலருணவு உதவிகளையாவது இம்மக்களுக்கு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை தாங்கள் எடுக்கவேண்டுமென தயவுடன் வேண்டுகின்றேன்.
வடமாகாணத்தில் இவ்வாறான உதவிகளை மாகாணசபை வெள்ள அகதிகளுக்குச் செய்வதாக ஊடகச் செய்திகளை பார்வையிட்டேன்.
அனர்த்தங்களின் போது அல்லற்படும் மக்களுக்கு உதவியளிக்க வேண்டிய பொறுப்பை மாகாணசபை கைவிடமுடியாது. வருட இறுதிக்காலம், நிதி ஒதுக்கீடுகள் இன்மை என்கின்ற வரையறைகளுக்கு அப்பால் சென்று எமது அமைச்சர் வாரியம் இவ்விடயத்தில் பொருத்தமான முடிவுகளை எடுத்து இம்மக்களுக்கு உதவ வேண்டும் என்று தயவுடன் வேண்டுகின்றேன்.என கிழக்கு மாகாண சபையின் எதிர் கட்சித்தலைவர் சி.தண்டாயுதபாணி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிழக்கு மாகாணசபை உதவ வேண்டும்-தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள்
byRajkumar
-
0