
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கை மீனவர்கள் 05 பேருக்கு இந்திய காக்கிநாடா நீதிமன்றம்; 180,000 (இந்திய ரூபா) ரூபா தண்டம் விதித்து விடுவித்துள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை கடற்றொழில் பரிசோதகர் பாலசுப்பிரமணியம் ரமேஸ்கண்ணா தெரிவித்தார்.
மேற்படி மீனவர்கள் 5 பேரையும் இலங்கை கடற்படையினரிடம் இந்திய கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (23) ஒப்படைத்த நிலையில், இவர்களை யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் பொறுப்பேற்று வாக்குமூலம் பதிவு செய்ததாகவும் அவர் கூறினார்.
இதன் பின்னர் மேற்படி 5 மீனவர்களையும் கடல் வழியாக திருகோணமலைக்கு திங்கட்கிழமை (24) அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் காக்கிநாடா பிரதேசத்திற்கு அண்மித்த கடற்பரப்பில் 'பலநாட் கல' படகில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 5 மீனவர்களை காக்கிநாடா கடற்படையினர்; கடந்த 2013ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 02ஆம் திகதி கைதுசெய்து, காக்கிநாடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
மேற்படி மீனவர்களின் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்த காக்கிநாடா நீதிமன்ற நீதவான், ஒரு மீனவருக்கு 30,000 ரூபா படி 04 மீனவர்களுக்கும் மாலுமிக்கு 60,000 ரூபாவும் (இந்திய ரூபா) தண்டம் விதித்ததுடன், நாடு செல்லவும் அனுமதியளித்ததாகவும் அவர் கூறினார்