யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, சங்கத்தானை புகையிரத நிலையத்துக்கு முன்னால், சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் சுற்றுலா பயணிகள் 10 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். மாதம்பேயிலிருந்து சுற்றுலாப் பயணிகளுடன் யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வானொன்றும், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நேருக் குநேர் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சுற்றுலா வாகனத்தில் பயணித்த, 4 பெண்களும் 6 ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், அதில் பயணித்த ஏனைய மூன்றுபேர், படுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர், யாழ். போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்த 17 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை உயிரிழந்த 10 பேரது சடலங்களும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதாக ரெதரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது